3 லட்சத்து 60 ஆயிரத்து 212 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:– தமிழ்நாடு முதல்–அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர் உள்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதல் இல்லாமல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைதியான முறையில் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் 558 முழு நேர நியாய விலைக் கடைகளும், 217 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 775 கடைகள் செயல்பட்டு வருகின்றன. 519 இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்கள், 3 லட்சத்து 59 ஆயிரத்து 693 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
வருகிற 7–ந்தேதி காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 வரை மாவட்டதில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அந்தந்த கிராமங்கள் வாரியாக முன்னறிவிப்பு செய்யப்பட்டவாறு அமைதியான முறையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும்.
எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம குடும்ப அட்டைதாரருக்கு வழங்க உள்ளது என்பது குறித்த விவரங்களை கிராம மக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக தேதி வாரியாக அட்டவணை தயார் செய்து அதனை அனைத்து நியாயவிலை கடைகளிலும் விளம்பர பதாகையாக அமைக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகை வழங்கலாம். பொதுமக்கள் அந்தந்த நியாயவிலை கடைகளில் சிரமமின்றி பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஏதுவாக நெரிசல் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் செய்யும் பணிகளை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வருவாய் வட்டம் வாரியாக ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை அமைதியான முறையில் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.