டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி கோவை வந்த என்ஜினீயர் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பு
டென்மார்க் நாட்டு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட என்ஜினீயர் 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவை வந்து பெற்றோரை தேடினார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
கோவை,
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் லிங்கனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு ராஜ்குமார் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அய்யாவு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டதால் சரஸ்வதி குடும்பத்தை விட்டு பிரிந்துசென்று விட்டார். இதனால் அய்யாவு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் மகன் ராஜ்குமாரை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் டென்மார்க் நாட்டை சேர்ந்த கெல்ட் - பெர்த் ஆண்டர்சன் தம்பதியினர் கோவை வந்தனர். அவர்களிடம் 3 வயதான ராஜ்குமார் சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டார். பின்னர் அவர்கள், ராஜ்குமாரை அழைத்துக்கொண்டு டென்மார்க் சென்றனர். அங்கு சென்றதும் ராஜ்குமாரின் பெயர் கேஸ்பர் ஆண்டர்சன் என்று மாற்றப்பட்டது. அவர் என்ஜினீயரிங் படித்து தற்போது கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
ராஜ்குமார் என்ற கேஸ்பர் ஆண்டர்சனுக்கு 10 வயது இருக்கும் போது வளர்ப்பு பெற்றோர், அவரை கோவையில் இருந்து தத்து எடுத்து வந்த விவரங்களை தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவர் தமிழகத்தை சேர்ந்த சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் இயக்குனர் நம்பி (சி.எஸ்.இ.டி.), நெதர்லாந்தை சேர்ந்த குழந்தை கடத்தலுக்கு எதிரான அமைப்பு மற்றும் நாராயணசாமி, வக்கீல் அஞ்சலி பவார் ஆகியோரின் உதவியை நாடினார்.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் என்ற கேஸ்பர் ஆண்டர்சன் 40 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோரை தேடி கோவை வந்தார். அவர் பெற்றோருடன் வசித்த தொண்டாமுத்தூர் பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இது பற்றி ராஜ்குமார் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. 3 வயதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம், கோவை குழந்தைகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை காண்பித்து ஆங்கிலத்தில் தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுவதாக உருக்கத்துடன் கூறியதாவது:-
என்னை தத்து கொடுத்த பின்னர் நான் டென்மார்க் அழைத்துச் செல்லப்பட்டேன். எனது வளர்ப்பு பெற்றோர் என்னை என்ஜினீயரிங் படிக்க வைத்து ஆளாக்கி உள்ளனர். நான் தத்தெடுக்கப்பட்டது பற்றி எனது வளர்ப்பு பெற்றோர் என்னிடம் ஏற்கனவே கூறி விட்டனர். டென்மார்க்கில் நான் பள்ளி, கல்லூரிகளில் படித்த போது மற்ற மாணவர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து வருத்தப்பட்டு உள்ளேன்.
அங்கு எல்லோரும் வெள்ளையாக இருப்பார்கள். ஆனால் நான் மட்டும் கருப்பாக இருந்தேன். இதனால் நான் வித்தியாசமான அனுபவங்களை உணர்ந்துள்ளேன். நான் ஒரு கட்டத்துக்கு வந்த பின்னர் எனது பெற்றோரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் கோவை வந்துள்ளேன். ஆனால் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறேன்.
கோவையில் பழைய மருதமலை கோவில் ரோடு கருப்பராயன் கோவில் பகுதியில் தான் எனது பெற்றோர் வசித்ததாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்த போது என்னை பார்த்தவர்கள், நான் எனது தந்தை அய்யாவு மாதிரி இருப்பதாக கூறினார்கள். ஆனால் எனது பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
பெற்றோரை பார்ப்பது என் மனதில் நீண்டநாள் கனவாக இருக்கிறது. மேலும் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக உள்ளது. ஒருவேளை நான் பெற்றோரை பார்த்தால் உடனடியாக அவர்களை டென்மார்க் நாட்டுக்கு அழைத்து செல்ல முடியாது. அங்கிருந்தவாறு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்குமார் என்ற கேஸ்பர் ஆண்டர்சன் தமிழகத்தில் வருகிற 9-ந் தேதி வரை தங்கி தனது பெற்றோரை தேட முடிவு செய்துள்ளார்.