மலப்பொட்டு பகுதியில் சாலையின் குறுக்கே அமைத்த மின்வேலியை அகற்ற தாசில்தார் உத்தரவு
மலப்பொட்டு பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட மின்வேலியை அகற்ற தாசில்தார் உத்தரவிட்டார்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-3 மலப்பொட்டு பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய மற்றும் மருத்துவ சிகிச்சை உள்பட பல்வேறு தேவைகளுக்கும் அத்திச்சால் வழியாக அய்யன்கொல்லிக்கு சென்று திரும்புகின்றனர்.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க சாலையின் குறுக்கே சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். இதனால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்கும் வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பந்தலூர் வருவாய் துறையினருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதனால் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மலப்பொட்டு பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சாலையின் நடுவே மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாலையின் குறுக்கே மின்வேலி அமைக்க அனுமதி வழங்கப்பட வில்லை. மேலும் யானைகளின் வழித்தடங்களில் மின்வேலி அமைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே உடனடியாக சாலையின் குறுக்கே அமைத்துள்ள மின்வேலியை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும். இல்லை எனில் வருவாய் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.