தாராபுரம் அருகே உடல் கருகிய நிலையில் ஓடையில் வாலிபர் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை

தாராபுரம் அருகே உடல் கருகிய நிலையில் ஓடையில் வாலிபர் பிணம் கிடந்தது. இதையடுத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-05 22:15 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பஞ்சப்பட்டி கிராமத்தில் உள்ள சின்னக்கரை ஓடையில், தீயில் கருகிய நிலையில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு கருகிய நிலையில் இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் பெட்ரோலும், அதன் அருகே ஒரு தீப்பெட்டியும், தீயில் எரிந்த ஒரு செல்போனும் கிடந்தது. இதைத்தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ஓடைக்கரையில் ஒரு மோட்டார் சைக்கிள் பூட்டிய நிலையில் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் ஏதும் உள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் சில ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த ஆவணத்தில் செல்வக்குமார் (வயது 21), தந்தை பெயர் பழனிசாமி, பவானி மெயின்ரோடு, வீரப்பன் சத்திரம், ஈரோடு என்ற முகவரி இருந்தது. மேலும் அந்த ஆவணங்களில் இருந்த செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில் தீயில் உடல் கருகி இறந்து கிடக்கும் வாலிபர், செல்வக்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் செல்வக்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த அவருடைய உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிளஸ்–2 வரை படித்துள்ள செல்வக்குமார் வீரப்பன்சத்திரம் பகுதியில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ. எந்திரம் விற்பனை செய்யும் கடைவைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரிகளும், 1 சகோதரனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செல்வக்குமார் மனச்சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். கடந்த 4–ந்தேதி மாலை, தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரிடம், வெளியில் சென்றுவருவதாக கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ. 6 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடன் கொடுத்த சிலருடன் முன்விரோதம் ஏற்பட்டு, அதனால் அவர்கள் செல்வக்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து, சின்னக்கரை ஓடையில் வைத்து கொலை செய்து, கொலையை மறைப்பதற்காக அவரது உடலை எரித்திருக்கலாம் என்றும், அதே வேளையில் செல்வக்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டாரிடம் அனுமதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வக்குமார் காதலித்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாராபுரம் அருகே ஓடையில் உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்