பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் துணிப்பை வினியோகம்; கலெக்டர் தகவல்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் துணிப்பை வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-05 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பள்ளி மாணவ– மாணவிகளுக்கு 1 லட்சம் துணிப்பைகளை வழங்கிய திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்து சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986–ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கிணங்க, ஒருமுறை பயன்பாடு மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் மீதான தடையினை கடந்த 1–ந் தேதி முதல் அமல்படுத்தியது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவது குறித்தும், மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஹார்மோன் சுரப்பில் சமச்சீர் இன்மை மற்றும் இதர உடல்நலக்குறைவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக பொதுமக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று பொருட்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை வழங்கும் வகையில், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் துணிப்பைகளை கடந்த மாதம் 15–ந் தேதி தாமாக முன்வந்து, பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சியினை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த துணிப்பைகள் திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, ஊத்துக்குளி மற்றும் பல்லடம் ஆகிய வட்டங்களை சார்ந்த 600 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை வழங்க முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்கும் தன்மையுடைய மாற்று பொருட்களை வழங்க முன்வரும் அமைப்புகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்த்து துணிப்பைகள் மற்றும் மாற்று பொருட்களை பயன்படுத்தி மாசில்லா மாவட்டமாக திகழ செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்