கோவில்பட்டி அருகே விபத்து கார்-மொபட் மோதல்; சிறுவன் பலி தாய் படுகாயம்
கோவில்பட்டி அருகே கார்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பலியானான். படுகாயம் அடைந்த அவனது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே கார்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பலியானான். படுகாயம் அடைந்த அவனது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3-ம் வகுப்பு மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்தவர் அழகு செல்வம் (வயது 34). இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயக்கொடி (30).
இவர்களுடைய மகன் அழகு மகராஜன் (10). இவன் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கார்-மொபட் மோதல்
நேற்று காலையில் பள்ளிக்கூடத்தில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதையொட்டி ஜெயக்கொடி தனது மொபட்டில் தன்னுடைய மகன் அழகு மகராஜனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றார். பின்னர் கூட்டம் முடிந்ததும், மதியம் பள்ளிக்கூடத்தில் இருந்து ஜெயக்கொடி தன்னுடைய மகனுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
நாலாட்டின்புத்தூர் நாற்கர சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது, மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்கொடி, அழகு மகராஜன் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
பரிதாப சாவு
உடனே அவர்கள் 2 பேருக்கும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகு மகராஜன் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த ஜெயக்கொடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசாத்தை (32) கைது செய்தார். கார்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.