தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்

தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2019-01-05 21:45 GMT
தூத்துக்குடி, 

தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விசுவரூப ஆஞ்சநேயர்

தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் சீதையை ராவணனின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆஞ்சநேயர் படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின்போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்தபோது, மலையில் இருந்த சிறு சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

6 கோவில்கள்

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்துள்ளன.

6 கோவில்களிலும், தெய்வச்செயல்புரத்தில் அமைந்துள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமன்ஜெயந்தி

இங்கு நேற்று அனுமன்ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலையில் பஞ்சசுத்த ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. விசுவரூப ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

பின்னர் சந்தனகாப்பு, கனி அலங்காரம், ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு கேசரி, வடை, புளியோதரை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்