கூடங்குளம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளில் 61 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கூடங்குளம் அருகே 2 வீடுகளில் 61 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர்,
கூடங்குளம் அருகே 2 வீடுகளில் 61 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 60), விவசாயி. அவருடைய மனைவி ருக்மணி (52). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். நேற்று காலை தங்கத்துரை தோட்டத்திற்கு சென்றுவிட்டார். ருக்மணி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். பக்கத்து கடை என்பதால், வீட்டை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கத்துரை வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவை திறந்து பார்த்துள்ளனர். ஆனால் அதில் நகையோ, பணமோ இல்லை. கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டனர்.
ஆசிரியர்
பின்னர் அங்கிருந்து காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து, பக்கத்து வீடான சுந்தர் (48) என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். சுந்தர், கூடங்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி அன்ன புளோரா, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் அன்ன புளோராவும், அவரது குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். சுந்தர் விடுமுறை எடுத்துக் கொண்டு, திசையன்விளையில் உள்ள நண்பரை பார்க்க சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சுந்தர் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க சங்கிலிகள், வளையல்கள், மோதிரம் உள்பட மொத்தம் 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
போலீசார் வலைவீச்சு
பின்னர் மதியம் சுந்தரின் குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர்கள் உடனடியாக தங்களுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த பின்னரே, ருக்மணிக்கும் தனது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற விவரம் தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி கூடங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் மற்றும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் 2 வீடுகளில் 61 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.