பள்ளிகொண்டா அருகே மாட்டு வண்டியை திருடி விற்றவர் கைது

பள்ளிகொண்டா அருகே வீடு முன் நிறுத்தப்பட்ட மாட்டு வண்டியை மாடுகளுடன் திருடி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-05 22:30 GMT
அணைக்கட்டு, 

பள்ளிகொண்டாவை அடுத்த எஸ்.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் பார்த்தசாரதி மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு வேலை முடிந்து திரும்பியதும் மாட்டு வண்டியை வீட்டு முன் நிறுத்தினார். பின்னர் 2 மாடுகளையும் அங்கேயே கட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக பார்த்தசாரதி வெளியே வந்தார்.

அப்போது மாடுகளுடன் மாட்டு வண்டியை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் மாட்டு வண்டியை பற்றியோ மாடுகளை பற்றியோ எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிகொண்டா பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதற்கு அவர் முறையான பதில் கூறாததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் குடியாத்தம் தாலுகா கூடநகரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் மகன் கார்த்திகேயன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் எஸ்.என்.பாளையம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டுவண்டி மற்றும் 2 மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய மாடுகளை காட்பாடியை அடுத்த லத்தேரியில் விற்றதாகவும் மாட்டுவண்டியை ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கில் விற்றதாகவும் தெரிவித்தார்.


இதனையடுத்து கார்த்திகேயனை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்து 2 மாடுகள் மற்றும் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்