18 நகராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் 100 சதவீதம் குப்பை இல்லா நகரம் உருவாக ஒத்துழைக்க வேண்டும் மண்டல இயக்குனர் பேச்சு

100 சதவீதம் குப்பை இல்லா நகரம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என 18 நகராட்சிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாமில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயகுமார் பேசினார்.

Update: 2019-01-05 22:45 GMT
திருவண்ணாமலை,

வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட 18 நகராட்சிகளுக்கு திடக் கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நேற்று திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் 18 நகராட்சிகளில் உள்ள நகராட்சிக்கு ஒரு துப்புரவு ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ‘தூய்மை இந்தியா’ திட்ட பரப்புரையாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பாரிஜாதம் முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

நாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து தூக்கி எறியும் பொருட்களை கழிவுகள் என்று கூறுகிறோம். இவை திடக்கழிவு, திரவக்கழிவு என வகைப்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நீர், காற்று, பூமி போன்றவை மாசுபடுகின்றன. இதனால் தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘ஷீரோ வேஸ்டேஜ்’ என்ற இலக்கை நோக்கி நாம் செல்கிறோம்.

துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறுகிற குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்க வேண்டும். மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யவும் திடக்கழிவு மேலாண்மை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 சதவீதம் குப்பை இல்லா நகரம் உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவண்ணாமலை நகர் நல அலுவலர் பிரதாப்குமார் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறுநாடகம் நடந்தது. மேலும் விஜய் ரசிகர் மன்ற திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பாரதி, மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர் கண்ணகி மற்றும் 28-வது வார்டை சேர்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் தங்கள் பகுதிகளுக்கு குப்பைக் கூடைகளை வாங்கி நகராட்சி மண்டல இயக்குனரிடம் வழங்கினர். முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்