காதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஓடும் பஸ்சில் வி‌ஷம் குடித்த பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

காதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவருத்தம் அடைந்த பெண் போலீஸ், ஓடும் பஸ்சில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-01-05 00:00 GMT

ராமநாதபுரம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் செண்பகம் (வயது 26). கடந்த 2011–ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருச்சி திருவெறும்பூரில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

அவருடன் திருச்சி துவாரபட்டி மலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயதேவன்(31) என்பவரும் போலீஸ்காரராக வேலை பார்த்தார். அவருக்கும், செண்பகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், அவர்களுக்கு அடுத்த மாதம் 11–ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி ஆஸ்பத்திரியில் ஜெயதேவன் அனுமதிக்கப்பட்டார். இதனால் மனவருத்தம் அடைந்த செண்பகம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வந்து, கோவில் பகுதியில் மயங்கி கிடந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதை கவனித்து, ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவர் வி‌ஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில் பஸ்சில் வரும் வழியில் புதுக்கோட்டை பகுதியில் வைத்து செண்பகம் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது.

செண்பகமும், ஜெயதேவனும் போலீஸ் பட்டாலியனில் பணியாற்றியபோது ராமேசுவரத்திற்கு பணிக்காக வந்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ராமேசுவரத்திலேயே உயிரை விட துணிந்து அவர் வரும் வழியில் பஸ்சிலேயே வி‌ஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவருடைய குடும்பத்தினர் செண்பகத்தை அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்