மங்கலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா

மங்கலம் அருகே டாஸ்மாக் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-01-04 22:45 GMT

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெருமாம்பாளையம் உள்ளது. இப்பகுதியில் 1000–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்களாகவும், பனியன் நிறுவன தொழிலாளர்களாகவும் உள்ளனர். மேலும் பெருமாம்பாளையம் பகுதிக்கு மிக அருகே புகழ்பெற்ற குழந்தை வேலாயுதசாமி கோவில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் பெருமாம்பாளையம் பகுதியை கடந்து குழந்தை வேலாயுதசாமி கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பெருமாம்பாளையம் குடியிருப்புக்கு மிக அருகே டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நேற்றுகாலை டாஸ்மாக் அமையவுள்ள இடத்தின் முன்பு அமர்ந்து பொதுமக்கள்““வேண்டாம்... வேண்டாம்... எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம், மீறினால் போராட்டம் நடத்துவோம் என கோ‌ஷமிட்டபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் தர்ணா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை இடத்தை விட்டு கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். பின்னர் சாமளாபுரம் வருவாய்த்துறை அதிகாரி சதீஷ், சாமளாபுரம் கிராம நிர்வாக அதிகாரி மெய்யப்பசாமி, பள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டம் நடத்திய பெருமாம்பாளையம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கலெக்டரிடம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு சென்று நேரடியாக சந்தித்து மனு கொடுங்கள் என தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் பெருமாம்பாளையம் பொதுமக்கள் கூறுகையில் ‘‘சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் பட்சத்தில் 2017–ம் ஆண்டு சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தை போல பொதுமக்களை ஒருங்கிணைத்து பெருமாம்பாளையம் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’’ என கூறினர்.

மேலும் செய்திகள்