விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி கும்பகோணம் கோர்ட்டு உத்தரவு

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கும்பகோணம் கோாட்டு உத்தரவிட்டது.

Update: 2019-01-04 22:45 GMT
கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் கட்டாநகரத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது65). விவசாயி. இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி ஜெயராமன் சேங்கனூர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயராமன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயராமனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ஜெயராமன் மனைவி ராதா இழப்பீடு கேட்டு கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2017-ம் ஆண்டு ஜெயராமன் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு வழங்கவில்லை.

இந்தநிலையில் ராதா கும்பகோணம் விரைவு கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கும்பகோணம் விரைவு கோர்ட்டு நீதிபதி செம்மல், இழப்பீட்டு தொகையுடன் வட்டிதொகையை சேர்த்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கும்பகோணம் கோர்ட்டில் நிறுத்தினர்.

மேலும் செய்திகள்