அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி தஞ்சை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-04 21:30 GMT
தஞ்சாவூர், 


கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சாய்ந்த மரங்கள், சேதம் அடைந்த வீடுகள், இறந்த கால்நடைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரண தொகை, பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் சூரக்கோட்டை பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என கூறியும், கணக்கெடுப்பு நடத்தாத அதிகாரிகளை கண்டித்தும், அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரியும் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் கிராமமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தஞ்சை தாசில்தார் அருணகிரி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராமமக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் 1½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்