புயல் தாக்கி 50 நாட்களாகியும் அகற்றப்படாமல் கிடக்கும் தென்னை மரங்கள் விவசாயிகள் வேதனை

திருச்சிற்றம்பலம் பகுதியில் புயல் தாக்கி 50 நாட்களாகியும் மரங்களை அகற்ற முடியவில்லை என தென்னை விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

Update: 2019-01-04 23:00 GMT
திருச்சிற்றம்பலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி திருச்சிற்றம்பலம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தென்னை விவசாயம் முற்றிலும் நிலை குலைந்துவிட்டது. இப்பகுதியில் தென்னை மரங்கள் மட்டுமின்றி தேக்கு, மா, பலா, புளி உள்ளிட்ட மரங்களும் வாழை, கரும்பு, மஞ்சள், சோளம் போன்ற தோட்டக்கலை பயிர்களும் அழிந்தன. இதனால் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதரமாக கொண்ட விவசாயிகளும் அதை சார்ந்த தொழிலாளர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

குறிப்பாக, தென்னையின் ஊடு பயிராக பல இடங்களில், வாழை, மஞ்சள், பாக்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன. தென்னை மரங்கள் சாய்ந்ததால் அதன் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட பிற வகை பயிர்களும் சாய்ந்து ஒன்றுடன் ஒன்று பின்னிக்கிடக்கிறது. தற்போது சாலை ஓரங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் விழுந்து கிடக்கும் மரங்களை மட்டுமே அகற்றும் பணியில் ஒரு சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் தொடர்ச்சியாக மரங்கள் விழுந்து கிடப்பதால் மரங்களை எடுத்து லாரிகள் மூலமாக வெளியே கொண்டுவருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல தென்னந்தோப்புகளில் புயலின் போது மரங்களுடன் விழுந்து கிடக்கும் தேங்காய்களை கூட இன்னும் சேகரித்து வெளியில் கொண்டு வர முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

பல வருட உழைப்பால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்புகள் கண்முன்னே அழிந்து கிடப்பதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இந்த தருணத்தை பயன்படுத்தி பல வெளி மாவட்ட மர வியாபாரிகள் சாய்ந்து கிடக்கும் ஒரு தென்னை மரத்தை ரூ.50-க்கு வாங்கி கட்டிட வேலைக்கும் செங்கல் சூளைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். விலை உயர்ந்த பிற மரங்களையும் மிக குறைவான விலைக்கே வியாபாரிகள் கேட்பதால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்.

புயல் தாக்கி 50 நாட்களாகியும் இப்பகுதியில் தென்னை மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்