நடிகர்கள் வீடுகளில் விடிய, விடிய வருமானவரி சோதனை ரூ.30 கோடி கடன் குறித்து யஷ்சிடம் விசாரணை; சிவராஜ்குமார் வீட்டில் 2 பைகளில் ஆவணங்கள் சிக்கின

கர்நாடகத்தில் நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் வீடுகளில் விடிய, விடிய வருமான வரி சோதனை நடந்தது. அப்போது ரூ.30 கோடி கடன் மற்றும் 20 கிலோ வெள்ளி ெபாருட்கள் இருப்பது பற்றி நடிகர் யஷ்சிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2019-01-04 23:30 GMT
பெங்களூரு,

சமீபகாலமாக ‘சேன்ட்டல்வுட்’ என அழைக்கப்படும் கன்னட திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்கள் வரத் தொடங்கியுள்ளன.

கே.ஜி.எப். படம்

சமீபத்தில் திரைக்குவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கே.ஜி.எப்.’ படம் ரூ.80 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியான 10 நாட்களில் ரூ.150 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படம் தான், கன்னட திரையுலக வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த படத்தின் வெற்றி மற்றும் வசூல் குறித்து ஊடகங்களில் பெரிய அளவுக்கு பேசப்பட்டது. அதே போல் சிவராஜ்குமார், சுதீப் நடித்த ‘தி வில்லன்’ படமும் பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது.

நடிகர்கள் சுதீப்-யஷ்

இந்த நிைலயில் நேற்று முன்தினம் காலை வருமான வரித்துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று, முன்னணி நடிகர்களான ஹெப்பால் பகுதியில் உள்ள சிவராஜ்குமார் வீடு, சதாசிவநகரில் உள்ள புனித்ராஜ்குமார் வீடு, ஜே.பி.நகரில் உள்ள சுதீப் வீடு, ஒசகெரேஹள்ளியில் உள்ள யஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்தனர்.

அதே போல் தயாரிப்பாளர்கள் மகாலட்சுமி லே-அவுட்டில் உள்ள ராக்லைன் வெங்கடேஷ் வீடு, ஜெயண்ணா வீடு, நாகரபாவியில் உள்ள கே.ஜி.எப். பட தயாரிப்பாளர் விஜய்கிரகந்தூர், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என மொத்தம் 8 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது.

25 இடங்களில்...

அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 25 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஒரே ேநரத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வாடகை கார்களில் வந்தனர். சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய நகரங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வங்கி லாக்கரை திறந்து ஆய்வு

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் இந்த வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றது. நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமாரை அதிகாரிகள் காரில் வங்கிக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு பெட்டகத்தை (லாக்கர்) திறந்து ஆய்வு செய்தனர்.

அதில் சொத்து ஆவணங்கள் இருந்ததாக சொல்லப் படுகிறது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு மீண்டும் சிவராஜ்குமார் வீட்டுக்கு வந்தனர். அந்த ஆவணங்கள் அடிப்படையில் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தி அதிகாரிகள் விவரங்களை சேகரித்துக் கொண்டனர். அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் 2 பைகளில் எடுத்துச் சென்றனர்.

20 கிலோ வெள்ளி

அதுபோல் நடிகர் சுதீப் வீட்டிலும் நேற்று சோதனை தொடர்ந்து நடைபெற்றது. மொத்தத்தில் நேற்று நடைபெற்ற சோதனையில், சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தினர்.

ஒசகெரேஹள்ளியில் உள்ள நடிகர் யஷ் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 20 கிலோ வெள்ளி பொருட்கள், 450 கிராம் தங்க நகைகள், ஒரு வைர சங்கிலி மற்றும் 2 பிளாட்டினம் சங்கிலி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.30 கோடி கடன்

அதுகுறித்து யஷ்சின் தாயாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் யஷ்சுக்கு 8 வங்கி கணக்குகள் இருப்பதும், அதில் 4 கணக்குகள் தனது தாயாருடன் இணைந்து தொடங்கி இருப்பதும் தெரியவந்தது. யஷ்சுக்கு ஒரு வங்கியில் ரூ.17 கோடியும், மற்றொரு வங்கியில் 13 கோடி ரூபாயும் என மொத்தம் ரூ.30 கோடி கடன் இருப்பது தெரியவந்தது.

மேலும் மண்டியாவில் நிலம் வாங்கி இருப்பதாக அதிகாரிகளிடம் யஷ் தெரிவித்தார். அதே போல் நடிகர் புனித்ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி., ஜெயண்ணா ஆகியோரின் வீடுகளிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

விடிய, விடிய சோதனை

கன்னட பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் விடிய-விடிய சோதனை நடத்தினர். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை சிற்றுண்டி, மதிய, இரவு உணவுகளை வெளியில் இருந்து வரவழைத்து சாப்பிட்டனர். வருமான வரி சோதனை காரணமாக நடிகர்கள், அவரது குடும்பத்தினர் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்தனர். இதனால் சோதனைக்கு மத்தியிலும் நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி தங்கள் வீட்டின் வளாகத்தில் காலை நடைபயிற்சி மேற்கொண்டனர்.

பரபரப்பு

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2-வது நாளாக சோதனை நீடித்ததால், கர்நாடக திரையுலகில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்