4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கண்காட்சி
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 7 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 4 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
அதன்பிறகு அவர், சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார். அங்கு பனை ஓலை, பாக்கு மட்டை, தேக்கு இலை போன்றவற்றை பயன்படுத்தி கலைநயமிக்க தட்டு, உறிஞ்சு குழல், குவளை போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்து பார்வைக்கு வைத்து இருந்தனர். அவற்றை சந்தைப்படுத்துவது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அமல்படுத்தப்பட்ட பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்காணிக்க 500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வியாபாரிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் துணிப்பை கொண்டு வருமாறு அறிவுறுத்துகின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை இந்த மாத இறுதிக்குள் முழுமையாக கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
விழிப்புணர்வு பிரசாரம்
பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தொடர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு யூனியன் அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களின் கண்காட்சி நடைபெறும். அந்த பொருட்களை சிறு வியாபாரிகள் வாங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜீவ் தாகூர் ஜேக்கப், மண்டல துணை தாசில்தார் அகிலா, தேர்தல் துணை தாசில்தார் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் தங்கசாமி, நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் திறந்து விட...
இதைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மணிமுத்தாறு 3, 4–வது ரீச்களின் மூலம் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இரவு நேரங்களில் சாத்தான்குளம் பழைய பஸ் நிறுத்தம் வரையிலும் பஸ்களை இயக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து சாத்தான்குளம் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட பஸ் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.