மயிலாடுதுறை அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பெண் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பெண் குற்றம் சாட்டினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி இளந்தோப்பு காலனி தெருவை சேர்ந்த குணசேகரன் மனைவி ராஜேஸ்வரி. அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயகோபால், ஆனந்தன். இந்தநிலையில் ராஜேஸ்வரி, மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் ஜெயபால், ஆனந்தன் மற்றும் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் முன்விரோதம் காரணமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் தாசில்தார் விஜயராகவன் தலைமையில் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இளந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆனந்தன், ஜெயகோபால், ராஜேந்தர், மணிகுமரன், ராமலிங்கம், அன்பழகி, பட்டவர்த்தி வருவாய் ஆய்வர் ராஜு மற்றும் மணல்மேடு போலீசார் கலந்து கொண்டனர்.
அப்போது இளந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால், ஆனந்தன் மற்றும் சிலர் ராஜேஸ்வரியை ஊரை விட்டு ஒதுக்கவில்லை என்று கூறினர். கூட்டத்தில் ராஜேஸ்வரியின் குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இருதரப்பினராலும் ஒப்பு கொள்ளப்பட்டது. ராஜேஸ்வரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் உயிருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது.