பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது

மயிலாடுதுறையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-04 22:15 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மேற்கு மாவட்ட செயலாளர் விமல் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தங்க.அய்யாசாமி, மாநில அமைப்பு துணைச் செயலாளர் காசி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கமல்ராஜா வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மயிலாடுதுறையில் பள்ளிவாசல் அருகிலும், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகம் நடமாடக் கூடிய பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை உடனே மூட வேண்டும். அந்த பகுதியில் உள்ள சாலையில் சட்ட-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் நின்று கொண்டு மதுக்குடிப்பவர்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து தாசில்தார் விஜயராகவனிடம், பா.ம.க.வினர் மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை உடனே மூட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் குத்தாலம் கணேசன், காமராஜ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் கண்ணகி சஞ்சீவிராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வைத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நகர செயலாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்