பள்ளிக்கூட வேனில் 4 வயது சிறுமி பலாத்காரம் ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

பள்ளிக்கூட வேனில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-04 21:45 GMT
தென்காசி, 

பள்ளிக்கூட வேனில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 வயது சிறுமி

தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். தினமும் அந்த சிறுமி காலையில் வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி வருவாள்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்த சிறுமி வேனில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். மாலையில் வேனில் இருந்து இறங்கிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளாள். அந்த சிறுமி இறங்கியவுடன் டிரைவரும் வேனை வேகமாக எடுத்து கொண்டு சென்று விட்டார்.

பின்னர் தாயாருடன் அந்த சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது சிறுமி அழுதார். பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுடன் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், அந்த சிறுமியை பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த ராஜூ மகன் இளையராஜா (வயது 39), வேன் டிரைவரான சொக்கம்பட்டியை சேர்ந்த பரமசிவம் (56) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தினமும் அந்த சிறுமி பயணிக்கும் வேனில் வழிநெடுகிலும் மற்ற மாணவ-மாணவிகள் இறங்கி கொள்ள, கடைசியாக இந்த சிறுமி மட்டும் தனியாக ஊருக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி அந்த 2 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த வேனில் கிளனருக்கு பதிலாக விளையாட்டு ஆசிரியர் சென்றது எப்படி? அவர் அடிக்கடி இதுபோன்று வேனில் சென்று வேறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்