முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை

முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

Update: 2019-01-03 22:30 GMT
கோவை,

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). வீடுகளுக்கான உள் அலங்காரம் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மீனாட்சி பிரியா. குழந்தைகள் இல்லை. மணிகண்டனின் உறவினர் ரமேசின் தம்பி சுரேசை அந்தபகுதியை சேர்ந்த சிலர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்பதற்காக ரமேஷ் மற்றும் மணிகண்டன் செல்வபுரம் 60 அடிசாலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்கும்பல் இவர்களை துரத்தியுள்ளது. இதனால் ரமேஷ் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் மணிகண்டனை ஏற்றிக்கொண்டு அந்த பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். அப்போது ஒரு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. ரமேஷ் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். கீழே விழுந்த மணிகண்டனை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தாக்கிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

முன்விரோத தகராறு கொலையில் முடிந்தது செல்வபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்