வீட்டுக்குள் ஓணான் புகுந்ததாக கூறி மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகை திருட்டு 3 சிறுவர்களுக்கு வலைவீச்சு

வீட்டுக்குள் ஓணான் புகுந்ததாக கூறி மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகையை திருடி சென்ற 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-03 21:30 GMT
சேலம், 

சேலம் 4 ரோடு அருகே ஓமலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 76). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். பத்மாவதி நேற்று கூரியர் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த 3 சிறுவர்கள் மூதாட்டியிடம், உங்கள் வீட்டுக்குள் ஓணான் ஒன்று புகுந்து விட்டது, அதை பிடித்துவிட்டு செல்கிறோம் என்று கூறி உள்ளே நுழைந்தனர்.

சிறிது நேரம் கழித்து அந்த சிறுவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து பத்மாவதி பூஜை அறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 30 பவுன் நகையை காணவில்லை. இதையடுத்து சிறுவர்கள் தான் அந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என்று அவர் கருதினார்.

இதுகுறித்து செவ்வாய்பேட்டையில் வசித்து வரும் தனது மகளிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் நகை திருட்டு போனது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அயூப்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மூதாட்டியை ஏமாற்றிவிட்டு வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிய 3 சிறுவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்