கோவையில் முதன்முறையாக 2 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு

கோவையில் முதன்முறையாக 2 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ‘பயோமெட்ரிக்’ எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-01-03 22:45 GMT
கோவை,

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வருகை தராமலும், பள்ளி பாட வேளையில் வெளியேறி விடுவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன. மேலும் பணிக்கு வராமலேயே மறுநாள் வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதைதொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ‘பயோமெட்ரிக்’ எந்திரம் வைக்கும் முறை நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதையொட்டி கோவையில் இருந்து 2 ஆசிரியர்கள் சென்னை சென்று பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்து பயிற்சி பெற்றனர். அவர்கள் கோவையில் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் முதன்முறையாக அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக் கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் எந்திரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் அந்த 2 அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு எந்திரம் அமைக்கப்பட்டது. இதனால் பணிக்கு வந்த ஆசிரியர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் தங்களின் விரல் ரேகையை பதித்து வருகையை பதிவு செய்தனர். இது போல் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்