பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் 2,200 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் 12 இடங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-03 23:00 GMT
விருதுநகர், 

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வந்த 8 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ந்தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆலைகளை திறக்க வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், 18 இடங்களில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கடந்த மாதம் 21-ந்தேதி பட்டாசு தொழிலாளர்கள், சார்பு தொழில் நிறுவன ஊழியர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்டாசு தொழிலாளர்கள் இடையே பேசினர். இது தொடர்பாக பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் சிவஞானம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தான் ஆய்வு செய்ததாகவும், அதன் அடிப்படையில் பேரியம் உப்பு இல்லாமல் 40 முதல் 50 சதவீதம் வரையிலான பட்டாசுகளை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பட்டாசு ஆலை அதிபர்கள் ஆலைகளை திறந்து உற்பத்தியை தொடங்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் பேரியம் நைட்ரேட் இல்லாமலும், சுப்ரீம் கோர்ட்டு வழிக்காட்டுதல்படி பசுமை பட்டாசு தயாரிக்க எந்த வரையரையும் தெரிவிக்கப்படாத நிலையில் பட்டாசு தயாரிக்க வாய்ப்பு இல்லை என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் நேற்று மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி சிவகாசி பஸ் நிலையம், சாட்சியாபுரம், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, பூலாவூரணி, ஆமத்தூர், சின்னகாமன்பட்டி, திருத்தங்கல், உப்போடை, கன்னிசேரிபுதூர், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் ஆகிய 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 1,100 பெண்கள் உள்பட 2,200 பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்