கர்நாடக ஐகோர்ட்டில் டிஜிட்டல் நூலகம் தனியார் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்
கர்நாடகத்தில் தனியார் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தனியார் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார். மேலும் கர்நாடக ஐகோர்ட்டில் டிஜிட்டல் நூலகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டிஜிட்டல் நூலகம்
துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று விதான சவுதாவில் சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
வக்கீல்களுக்கு, முக்கியமாக நூலகங்கள் தேவைப்படுகிறது. ஐகோர்ட்டில் தற்போது உள்ள நூலகம் மிக பழையது. அங்கு புதிய புத்தகங்கள் இல்லை. வேறு நூலகங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் டிஜிட்டல் நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட பல்கலைக்கழகத்தில் மொத்தம் 906 கல்லூரிகள் உள்ளன. கர்நாடக ஐகோர்ட்டில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 189 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இலவச மடிக்கணினி
அரசு மற்றும் அரசு மானியம் பெறும் சட்ட கல்லூரிகளில் பயிலும் தலித், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தனியார் சட்ட கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
கிராமப்புற மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அதிகாரிகள் செய்ய வேண்டும். தற்போது இளம் வக்கீல்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை ரூ.5,000 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.