பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-01-03 22:30 GMT
புதுக்கோட்டை,

ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடை குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தது.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் கணேஷ் இந்த வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிரசார வாகனத்தின் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விவரம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், பொது மக்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தல், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் போன்ற பல்வேறு தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

பொது மக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகள் உள்ளிட்ட மாற்று பொருட்களை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக டவுன்ஹால் வரை சென்றது. இந்த வாகனத்தின் முன்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட வேண்டிய மாற்றுப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற் படுத்தினர்.

மேலும் செய்திகள்