பெரிய பட்ஜெட் படங்கள் தான் சோதனைக்கு காரணம் வருமானவரி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் நடிகர் சுதீப் பேட்டி

பெரிய பட்ஜெட் படங்கள் தான் சோதனைக்கு காரணம் என்றும், வருமானவரி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் நடிகர் சுதீப் கூறினார்.

Update: 2019-01-03 22:30 GMT
பெங்களூரு, 

பெரிய பட்ஜெட் படங்கள் தான் சோதனைக்கு காரணம் என்றும், வருமானவரி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் நடிகர் சுதீப் கூறினார்.

நடிகர் சுதீப் வீட்டில் சோதனை

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள நடிகர் சுதீப்பின் வீட்டில் வருமான வரி சோதனை நேற்று நடந்தது. இந்த வேளையில் நடிகர் சுதீப் மைசூரு படப்பிடிப்பில் இருந்தார். வருமான வரி சோதனை பற்றி அறிந்தவுடன் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு வந்தார்.

பின்னர், வருமானவரி சோதனை குறித்து நடிகர் சுதீப் கூறியதாவது:-

தவறு செய்யாத...

வருமான வரி சோதனையானது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட காரணத்துக்காக மேற்ெகாள்ளப்பட்டு உள்ளதாகவும் நான் நினைக்கவில்லை. வருமான வரித்துறைக்கும், அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாத நான் பயப்பட தேவையில்லை.

நிதி விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள். தற்போதும் அதே காரணத்துக்காக சோதனையை நடத்தி இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை.

பெரிய பட்ஜெட் படங்கள் காரணம்

எனது தாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய வயது 70-யை தாண்டியுள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வந்துள்ளேன். வருமான வரித்துறையினர் அவர்களின் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகில் வெளியாகி வருகின்றன. மேலோட்டமாக பார்க்கும்போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானது தான் வருமான வரி சோதனைக்கு காரணம் என்று நினைக்கிறேன். என் வீட்டு சுற்றுச்சுவரை ஏறி குதித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. அவர்கள் பிரதான வாசல் வழியாகவே உள்ளே வந்து சோதனை நடத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்