பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கோவில்களில் காகித பைகளில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்ததால், திருப்பத்தூர் பகுதியில் உள்ள கோவில்களில் ரெடிமேட் காகித பைகளில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2019-01-03 23:00 GMT
திருப்பத்தூர், 

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மளிகை கடைகள், காய்கறி நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள், பெரிய வணிக வளாகங்கள், பல சரக்கு கடைகள் உள்ளிட்ட கடைகளில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்தந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டில் இருந்து துணிப்பை கொண்டு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் இறைச்சிக் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் வீட்டில் இருந்து பாத்திரங்களை எடுத்து செல்கின்றனர். மதுபான பார்களில் கண்ணாடி டம்ளர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுதவிர தற்போது மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அர்ச்சனை பொருட்கள் முன்பு பிளாஸ்டிக் பைகளில் வைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ரெடிமேட் காகித பைகளை வாங்கி வந்து, அதில் அர்ச்சனை பொருட்களை வைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குருபகவானை தரிசனம் செய்வதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சனை பொருட் கள் ரெடிமேட் காகித பைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவில் டிரஸ்டி வீரப்பச் செட்டியார் கூறியதாவது:- இந்த கோவிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு அர்ச்சனை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்பனை செய்தோம். தற்போது தமிழக அரசு தடை விதித்ததால் கடந்த 1-ந்தேதிக்கு முன்பாகவே கோவிலில் உள்ள அறிவிப்பு ரேடியோ மூலம் பக்தர் கள் அர்ச்சனை பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து துணிப்பை மற்றும் கூடைகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்தோம். தற்போது மதுரையில் தயாரிக்கப்பட்டு வரும் ரெடிமேட் காகித பைகளில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்