சாயல்குடி அருகே ரூ.2 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது
சாயல்குடி அருகே ரூ.2 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மலைமுருகன்(வயது42). இவரும் பரமக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் டிராக்டர் லோன் வாங்கியவர்களிடம் மாத தொகை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்த 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு சென்றனர்.
அப்போது அவர்களை 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் கூராங்கோட்டை என்ற இடத்தில் வழிமறித்து உள்ளனர். 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி மேற்கண்ட இருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 800-ஐ பறித்துச்சென்று தலைமறைவானார்கள்.
இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டார். இதன்படி இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் மேற்கண்ட 4 பேரும் முதுகுளத்தூர் பகுதியில் இருந்து பின்தொடர்ந்து வந்ததாக மேற்கண்ட 2 பேரும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் வந்த வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 4 பேரும் வரும் வழியில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததும், அவர்களின் வாகன பதிவு எண்ணும் தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தபோது மர்ம நபர்கள் குறித்து தகவல் கிடைத்தது.
போலீசாரின் விசாரணையில் மேற்கண்ட நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் காளிகுமார் (23), சுந்தரபாண்டி மகன் சரவணன்(22) என்பது தெரியவந்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன், பாலமுருகன் ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன்அடிப்படையில் போலீசார் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர். இவர்கள் மீது சிவகங்கை மாவட்டத்தில் பல வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்த மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் நண்பர்களான சரவணன், காளிகுமாருடன் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிர குற்ற பிரிவு போலீசார் தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.