மந்திரி கிருஷ்ணபைரே கவுடா மீது ரூ.800 கோடி ஊழல் புகார் ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா பிரமுகர் கொடுத்தார்
விவசாய திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் நடந்திருப்பதாக மந்திரி கிருஷ்ணபைரே கவுடா மற்றும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா பிரமுகர் புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூரு,
விவசாய திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் நடந்திருப்பதாக மந்திரி கிருஷ்ணபைரே கவுடா மற்றும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா பிரமுகர் புகார் கொடுத்துள்ளார்.
மந்திரி மீது புகார்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக இருந்து வருபவர் கிருஷ்ணபைரே கவுடா. இவர், சித்தராமையா தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை மந்திரியாக இருந்திருந்தார்.
இந்த நிலையில், மந்திரி கிருஷ்ணபைரே கவுடா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாண்டுரங்கா நாயக், சதீஸ் ஆகிய 3 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள ஊழல் தடுப்பு படை போலீசில் பா.ஜனதா கட்சியின் பிரமுகரான என்.ஆர்.ரமேஷ் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார்.
ரூ.800 கோடி ஊழல்
அதில், கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா ‘கிருஷி பாக்ய’ என்றும் விவசாய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்திற்காக ரூ.1,608 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தை அப்போது விவசாயத்துறை மந்திரியாக இருந்த கிருஷ்ணபைரே கவுடா தான் செயல்படுத்தினார். ‘கிருஷி பாக்ய’ திட்டத்தின் கீழ் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க மாநிலம் முழுவதும் விவசாய நிலங்களில் 30 ஆயிரம் குளங்கள் அமைத்து கொடுத்தல், அதனை பராமரித்தல் மற்றும் பிற விவசாய பணிகளை மேற்கொண்டதில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து ஊழல் நடந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை ரூ.800 கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது.
இந்த ஊழலில் மந்திரி கிருஷ்ணபைரே கவுடா ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாண்டுரங்கா நாயக், சதீஸ் ஆகியோரும் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரை பெற்றுக்கொண்ட ஊழல் தடுப்பு படை போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மந்திரி மற்றும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
லோக் ஆயுக்தாவிலும் புகார்
இதுகுறித்து என்.ஆர்.ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிருஷி பாக்ய திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.800 கோடி ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழலில் அப்போதைய விவசாயத்துறை மந்திரியான கிருஷ்ணபைரே கவுடா, ஐ.ஏ.ஸ். அதிகாரிகள் பாண்டுரங்கா நாயக், சதீஸ் ஈடுபட்டுள்ளனர். ஊழல் நடந்திருப்பதற்கான எல்லா விதமான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அந்த ஆதாரங்களை ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் வழங்கியுள்ளேன். இந்த ஊழல் குறித்து கர்நாடக அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’ என்றார்.
இதற்கிடையில், ரூ.800 கோடி ஊழல் குறித்து பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தாவிலும் மந்திரி கிருஷ்ணபைரே கவுடா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாண்டுரங்கா, சதீஸ் மீது என்.ஆர்.ரமேஷ் புகார் அளித்துள்ளார்.