கூடலூர் அருகே, தோட்டங்களில் புகுந்து வாழைத்தார்களை திருடும் கும்பல்

கூடலூர் அருகே வாழை தோட்டங்களுக்குள் புகுந்து வாழைத்தார்களை ஒரு கும்பல் திருடி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-01-03 22:30 GMT
கூடலூர், 

கூடலூர் பகுதியில் பெரும்பான்மையானோர் விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இதில் மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், மொச்சை, அவரை மற்றும் தட்டைப் பயிறு வகைகளையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் ஒரு கும்பல் புகுந்து வாழைத்தார்களை வெட்டி திருடிச் செல்கின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையங்களில் விவசாயிகள் புகார் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கல்உடைச்சான் பாறை, கொங்்குச்சிபாறை, பெருமாள்கோவில் புலம், சரித்திரவு, காக்கான்ஓடை, கோவிந்தன்புலம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து தேங்காய் மற்றும் வாழைத்தார்களை திருடி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ‘தேங்காய் மற்றும் வாழைத்தார்களை திருடிச் செல்லும் கும்பல்களைப் பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருடர்களை பிடித்துக் கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். இதனால் அவர்கள் மீண்டும் தோட்டங்களுக்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். எனவே அனைத்து விவசாயிகளும் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்