ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்து குதறியதில் சிறுமி படுகாயம்
ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்து குதறியதில் சிறுமி படுகாயம் அடைந்தாள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி விரட்டி கடித்து வருகின்றன. இந்த நாய்களின் தொல்லை இன்னும் அதிகரித்து வீடுகளின் முன்பு விளையாடும் குழந்தைகளை குறிவைத்து கடித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகரசபை நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்டு வெளியிடங்களில் விடப்பட்டாலும் முழுமையாக இந்த நாய்களை பிடித்து கட்டுப்படுத்தவில்லை. இதன்காரணமாக நாய்கள் எண்ணிக்கை பிடிபடும் நாய்களை விட அதிகஅளவில் காணப்படுகிறது. இந்த நாய்களின் தொல்லைகளால் மக்கள் வெளியில் செல்லவும், குழந்தைகளை விளையாட விடவும் அச்சப்பட்டு வருகின்றனர். சாதாரண நாய்கள் என்றால் அதற்கான ஊசி போட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்றாலும் தெருநாய்களில் சில வெறிபிடித்து திரிவதால் எந்த நாய் வெறியுடன் உள்ளது என்பது தெரியாமல் மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் ஒரே நாளில் பலரை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளன. ராமநாதபுரம் குமரையா கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் பாண்டி(45) என்பவரையும், எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த முனியம்மாள்(78) என்ற மூதாட்டியையும் தெருநாய் கடித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேபோல நேற்று காலை ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 3-வது தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் ஜீவஜெர்லின்(வயது3) என்ற சிறுமி தெருவில் வழக்கம்போல விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக குரைத்தபடி ஓடிவந்த நாய் ஒன்று சிறுமியை சரமாரியாக கடித்து குதறியது. இதில் அந்த நாய் சிறுமியின் கழுத்து பகுதியில் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உடலின் பல பாகங்களிலும் கடித்து குதறிய நாய் அக்கம் பக்கத்தினர் விரட்டியதும் தப்பி ஓடிவிட்டது. ரத்த காயத்துடன் அலறி துடித்த ஜீவஜெர்லின் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
சிறுமியை தெருநாய் கடித்து குதறியது மற்றும் ஒரே நாளில் பல இடங்களில் நாய்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தெருக்களில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பாரபட்சமின்றி ஒட்டுமொத்தமாக பிடித்து சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து காட்டுபகுதியில் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.