பள்ளிவாசலை சீரமைப்பதற்கு தடை: முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 211 பேர் கைது

பள்ளிவாசலை சீரமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி ஒரத்தநாட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 211 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-03 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வெட்டிக்காடு ஊராட்சி ஆலடிவெட்டிக்காடு கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் கஜா புயலில் சேதமடைந்தது. இதனால் இந்த பள்ளிவாசலை சம்மந்தப்பட்டவர்கள் (முஸ்லிம்) சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் சிலர் (இந்து) எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், உதவி கலெக்டருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றும், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பின் படி இருதரப்பினரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் உதவி கலெக்டர் சுரேஷ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மறுமுனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்திற்கு எதிரே திரண்டனர். அவர்களிடம் தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும், அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறும் கூறினார். ஆனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்தபோவதாக கூறிவிட்டு ஒலிபெருக்கி கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற் கழக மாவட்டத்தலைவர் அகமதுகாஜா தலைமை தாங்கினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் அஸ்லம்பாட்சா, தலைமை கழக பேச்சாளர் கோவைசெய்யது ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளிவாசலை சீரமைக்க தடை விதித்த தஞ்சை உதவி கலெக்டர் சுரேசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லாஹ் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 211 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று அங்கு தங்க வைத்தனர். பிறகு அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்