மேலப்பாளையத்தில் மண்டல அலுவலகத்தை மீன் வியாபாரிகள் முற்றுகை

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மீன் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-03 21:45 GMT
நெல்லை, 

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மீன் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகள் போராட்டம்

நெல்லை மேலப்பாளையம் மண்டல பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சாலையோர மீன் கடைகள் உள்ளன. மாநகராட்சி அனுமதியின் பேரில் அவர்கள் கொடுக்கும் ரசீது அடிப்படையில் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் மீன்கள் விற்பனை செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்தினர். அனைத்து சாலையோர கடைகளில் இருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் லாரி மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மீன் வியாபாரிகள் சங்க தலைவர் பஷீர் தலைமையில் மேலப்பாளையம் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மண்டல அலுவலகத்துக்கு வந்த உதவி ஆணையாளர் கவிதாவின் காரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்கள் ஒப்படைப்பு

தகவல் அறிந்த நெல்லை மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், போராட்டம் நடத்திய மீன் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் திறந்த வெளியில் சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் மீன்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என அதிகாரிகள், வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்