டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த கிராம மக்களின் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
சிவகிரி,
சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த கிராம மக்களின் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
கிராம மக்கள் போராட்டம்
சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு சத்திரம்-வடுகபட்டி இடையே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என தெற்குசத்திரம், வடக்கு சத்திரம் மற்றும் வடுகபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த கடை முன்பு 3 கிராம மக்களும் கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மதிவாணன், கிருஷ்ணகனி ஆகியோர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவுக்கு வந்தது
இந்த நிலையில் நேற்று மாலையில் தென்காசி உதவி கலெக்டர் சவுந்திரராஜன், சிவகிரி தாசில்தார் செல்வசுந்தரி மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, உதவி கலெக்டர் சவுந்திரராஜன் கூறுகையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்துள்ளேன். தெற்கு சத்திரம்-வடுகபட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதற்கு அதிக பட்சமாக 2 மாதங்கள் ஆகும். டாஸ்மாக் கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதாகவும், முடிந்தால் வேறு இடத்திற்கு கடையை மாற்றுவதாகவும், 2 மாதங்களுக்குள் இந்த கடையை அங்கு இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்தார். அதுவரை மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.