மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக கர்நாடகாவுக்கு பேரணியாக சென்ற விவசாயிகள் ஓசூரில் தடுத்து நிறுத்தம் சாலைமறியல்-பதற்றம்

மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக கர்நாடகா நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகளை ஓசூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2019-01-03 23:00 GMT
ஓசூர்,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தும், ஒகேனக்கல் அருகே ராசி மணலில் தமிழகம் அணை கட்ட ஒத்துழைக்க வலியுறுத்தியும், ஜனவரி 3-ந்தேதி(நேற்று) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்து இருந்தார்.

அதன்படி, மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஓசூர் தர்கா பகுதியிலிருந்து நேற்று பகல் 12 மணிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை முழங்கியவாறு சென்றனர். இந்த நிலையில், ஓசூர்-சிப்காட் பகுதியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரும் மீண்டும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சர்வீஸ் ரோட்டில் கூடினார்கள்.

பின்னர் அங்கு பி.ஆர். பாண்டியன், மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வி.ஏ.பாலமுரளி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குமரேசன் மற்றும் த.மா.கா. நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாய ஒருங்கிணைப்பு குழுவினரின் போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பார்வையில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னதாக, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த போராட்டம், அரசியலுக்கு அப்பாற்பட்டு முற்றிலும் விவசாயிகள் கையில் எடுத்துள்ள போராட்டம். எங்கள் உயிர் உள்ளவரை மேகதாது அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம். அங்கு அணை கட்டினால், தமிழகம் முற்றிலும் அழிந்து விடும். நீர் ஆதாரம் பறிபோய் விடும்். தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாகிவிடும்.

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசி மணலில் அணை கட்டும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும். கர்நாடக அரசு அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். எங்கள் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்.பி.க்களை ‘சஸ்பெண்ட்’ செய்திருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் கோரிக்கைகள் மறுக்கப்பட்டால், மோடியை தமிழகம் வர அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்