மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு கலப்பட உணவு குறித்து விழிப்புணர்வு போட்டி அதிகாரி தகவல்

கலப்பட உணவு குறித்து மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-03 22:45 GMT

திருவண்ணாமலை,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பள்ளி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவின் அவசியத்தை வலியுறுத்தியும் உணவில் கலப்படத்தை உடனடியாக எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வருகிற 27-ந் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கும் பெறும் அனைவருக்கும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம்.

http://fssa-i-g-ov.in/cr-e-at-iv-ity-c-h-a-l-l-e-n-ge/ என்ற இணைய தள முகவரியில் தங்கள் பள்ளி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விபரம் மற்றும் போட்டி நடைபெறும் நாட்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்