பிடிவாரண்டு குற்றவாளிகளை தேடிச்சென்ற அதிரடிப்படை போலீஸ்காரர் மீது சோடா பாட்டில் தாக்குதல்

பிடிவாரண்டு குற்றவாளிகளை தேடிச்சென்ற போலீசார் சோடா பாட்டிலால் தாக்கப்பட்டனர்.

Update: 2019-01-02 22:15 GMT

வில்லியனூர்,

புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீசார் 2 பேர் நேற்று மாலை வில்லியனூர் பகுதிக்கு பிடிவாரண்டு குற்றவாளிகளை தேடிச்சென்றனர். அப்போது குரும்பாபேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜ் என்பவரை அவர்கள் வழிமறித்து விசாரித்தனர். அவர் மதுபோதையில் இருந்ததால் போலீசாரிடம் தகராறு செய்தார்.

இதையடுத்து அவருடன் வந்த தாமோதரன், நாகராஜை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். இதன்பின்னர் போலீசார் இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். போலீசார் வழிமறித்து விசாரித்ததால், ஆத்திரம் தீராத நாகராஜ், தாமோதரனை வழியில் இறக்கிவிட்டு, போலீஸ்காரர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

ஊசுடு ஏரிக்கரை சாலையில் சென்றபோது, நாகராஜன் போலீஸ்காரர்கள் அருகில் நெருங்கிச்சென்று தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சோடா பாட்டிலால் தாக்கினார். இதில் தலையில் காயமடைந்து நிலை குலைந்த அதிரடிப்படை போலீசார் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் சரிந்து விழுந்தனர். நாகராஜியும் போலீசாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் 3 பேரும் காயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்றவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

பிடி வாரண்டு குற்றவாளிகளை தேடிச்சென்ற அதிரடிப்படை போலீசார் சோடா பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்