மாணவர்கள் லட்சியத்துடன் படித்து முன்னேற வேண்டும் கீழ்பென்னாத்தூர் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் பேச்சு
மாணவர்கள் லட்சியத்துடன் படித்து முன்னேற வேண்டும் என கீழ்பென்னாத்தூர் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று கல்வித்தரம் குறித்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், 3-ம் பருவத்திற்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் இல்லாத பள்ளியாக வைத்துக்கொள்வேன் என்ற உறுதிமொழியை மாணவர்களை வாசிக்க வைத்து ஏற்க செய்தார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அவர், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஏன் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார்.
பின்னர் 2019-ம் ஆண்டையொட்டி மாணவர்களுடன் கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புது வருட நாளில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள் எனக் நான் கேட்டதற்கு கலெக்டர், டாக்டர், ராணுவவீரர், என்ஜினீயர் என தெரிவித்தீர்கள். ஆனால் நான் இங்கு ஆய்வு செய்ததில் தேர்ச்சி சதவீதம் மகிழ்ச்சியாக இல்லை. 56 பேர் குறைந்த திறனோடு உள்ளனர். கடந்த ஆண்டில் தமிழ், ஆங்கிலத்தில் 5 பேர் தேர்ச்சி பெறாதது வருத்தமாக உள்ளது. ஆசிரியர் மணிக்கணக்கில் பாடம் சொல்லித்தருவதை நன்றாக புரிந்து கொண்டு கவனத்தை சிதறடிக்காமல் படிக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள். பெற்றோருக்கும் உதவியாக இருக்க வேண்டும். லட்சியத்துடன் நீங்கள் படிக்க வேண்டும். கல்விதான் உங்களை உயர்த்தும்.
தமிழ அரசு கல்விக்கு நிறைய சலுகைகள் வழங்குகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை விலையில்லா பாடபுத்தகங்கள் உள்பட இலவசமாக படிக்க வழங்கும் சலுகைகளையும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு நன்றாக படித்து முன்னேற வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ்.திட்டம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அவர் சத்துணவு சாப்பிட்டார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமார், ஒன்றிய ஆணையாளர் லட்சுமி நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, தாசில்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ஸ்ரீராமுலு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.