புதிய அணை கட்டும் கர்நாடகஅரசை கண்டித்து மேகதாதுவை இன்று விவசாயிகள் முற்றுகை பி.ஆர்.பாண்டியன் பேட்டி

புதிய அணை கட்டும் கர்நாடகஅரசை கண்டித்து மேகதாதுவை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2019-01-02 23:00 GMT
தஞ்சாவூர்,


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகஅரசுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் கர்நாடகஅரசை கண்டித்தும் மேகதாதுவை முற்றுகையிடுவதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் புறப்பட்டு தஞ்சை கீழவஸ்தாசாவடிக்கு நேற்று வந்தனர். பின்னர் இவர்கள் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.


முன்னதாக பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகஅரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை தர மறுப்பதால் குறுவை சாகுபடியை இழந்து வருகிறோம். ஒரு போக சம்பா சாகுபடியும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தநிலையில் உபரி தண்ணீரை தடுத்து தமிழகத்தை அழிக்கும் நோக்குடன் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகஅரசு முயற்சி செய்கிறது. இதற்கு மத்தியஅரசு மறைமுகமாக உதவி செய்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், ராசிமணலில் அணை கட்ட ஒத்துழைக்கும்படி கர்நாடகஅரசை வலியுறுத்தியும் முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்.

இதற்காக விவசாயிகள் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு மேகதாதுவுக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்