குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 22:30 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாடூர் மற்றும் இருளர் காலனியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக டிராக்டர் மூலமும் குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அவதிக்கு உள்ளான அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சீராக குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை திருத்தணி– சோளிங்கர் நெடுஞ்சாலை இ.என்.கண்டிகை பஸ்நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, சாமி நாதன், இன்ஸ்பெக்டர் பரந்தாமன், மண்டல அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்