தர்மஸ்தலா பாகுபலி சிலைக்கு பிப்ரவரி 15-ந் தேதி மகா மஸ்தகாபிஷேகம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார்
12 ஆண்டுகளுக்கு பிறகு தர்மஸ்தலாவில் உள்ள பாகுபலி சிலைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மகா மஸ்தகாபிஷேக விழா நடக்கிறது.
மங்களூரு,
12 ஆண்டுகளுக்கு பிறகு தர்மஸ்தலாவில் உள்ள பாகுபலி சிலைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மகா மஸ்தகாபிஷேக விழா நடக்கிறது. இதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார்.
மகா மஸ்தகாபிஷேகம்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா பகுதியில் 57 அடி உயர பகவான் பாகுபலி சிலை உள்ளது. இந்த சிலைக்கு 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான சாதுக்கள், புத்தமத துறவிகள் கலந்து கொண்டனர்.
இதேப்போல மஞ்சுநாதா கோவில் அருகே உள்ள மலையில் 39 அடி உயர பாகுபலி சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடைசியாக 2007-ம் ஆண்டு மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது.
ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் பாகுபலி சிலைக்கு மகா மஸ்தகாபிஷேகம் நடத்த முடிவு செய்து உள்ளோம். 15-ந் தேதி தொடக்க விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடக்கி வைக்கிறார். இதில் 1008 கலசங்களில் சிறப்பு பூஜை செய்து பாகுபலி சிலைக்கு ஊற்றப்பட உள்ளது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
சரவணபெலகோலாவில் நடந்த மகாமஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொண்டது போல இங்கு நடக்கும் மகாமஸ்தகாபிஷேக விழாவில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான புத்தமத துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா மஸ்தகாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த தனி தாசில்தார் ஒருவரை மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர் நியமித்து உள்ளார். மேலும் பக்தர்களின் வசதிக்காக சாலைகள் மேம்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறியுள்ளார்.
பூமியை காப்பாற்ற வேண்டும்
தர்மஸ்தலா கிராம அபிவிருத்தி திட்டம் கடந்த 1982-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடிவு செய்து உள்ளோம். இதன் ஒரு கட்டமாக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கி 3,300 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை கடன் வழங்கி உள்ளோம். பிரதமர் மோடி கடைசியாக தர்மஸ்தலாவுக்கு வந்த போது இந்த பூமியை காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
நீர்மட்டம் உயர வாய்ப்பு
மாநிலத்தில் 120 தாலுகாக்கள் வறட்சியின் பிடியில் உள்ளது. அந்த தாலுகாக்களில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படும்.
வடகர்நாடகத்தில் மாநில அரசுடன் சேர்ந்து 120 குளங்களை தூர்வாரி உள்ளோம். மேலும் எங்கள் மகளிர் அமைப்பு சார்பில் 100 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. குளங்களை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
வடகர்நாடகத்தில் உள்ள யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர், கலபுரகி ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்தை மேம்படுத்த மராட்டியத்தை சேர்ந்த அமைப்புடன் கைகோர்த்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் குடகு மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்த மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக வருகிற 10-ந் தேதி அங்கு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிடிவாதம் வெற்றி பெற்று உள்ளது
இதையடுத்து நேற்று காலை சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது, சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று வலியுறுத்தி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று(நேற்று) 2 பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ததன் மூலம் போராட்டக்காரர்களின் பிடிவாதம் வெற்றி பெற்று உள்ளது.
என்னை பொறுத்தவரை 45 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது சரி. காலையில் மாலை அணிந்து விட்டு, மாலையில் கோவிலுக்கு செல்வது என்பது உகந்தது அல்ல என்றார்.