தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயராமன் வரவேற்றார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் சுப்பிரமணியன், சண்முகம், எலசியப்பன், ஜானகிராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2019-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். இவர்களுக்கு மற்ற துறைகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதை போல் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.