தர்மபுரியில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரியில் விதிமுறையை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி,
தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இதன்படி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்த ராஜன், சுசீந்திரன், நாகராஜன், ரமணசரண், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது லட்சுமி காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1½ டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது மேலும் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி நகரில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஓட்டல்கள், சாலையோர கடைகள், மாலை நேர தள்ளுவண்டி கடைகளில் உணவு வழங்க வாழை இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை தட்டுகளில் வைத்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார் எச்சரித்து உள்ளார்.
நல்லம்பள்ளியில் உதவி திட்ட இயக்குனர் ரவிசங்கர்நாத், தாசில்தார் பழனியம்மாள் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் நல்லம்பள்ளி கடைவீதி, லளிகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பெரும்பாலான வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்தனர். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழித்தேவன், விமலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்மணி, மெகருனிசா, வருவாய் ஆய்வாளர் சுதாகர், ஊராட்சி செயலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.