வேலூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’ சட்டத்தில் பெயிண்டர் கைது

மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெயிண்டர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-01 23:58 GMT
வேலூர், 

வேலூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெயிண்டர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூரை அடுத்த பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 37), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஷாஜகானின் மனைவி மற்றும் மகள் அவரை விட்டு பிரிந்து சேத்துப்பட்டில் வசித்து வருகின்றனர்.

மனைவியை பிரிந்து தனிமையாக வாழ்ந்து வந்த ஷாஜகான் கடந்த சில மாதங்களாக 10 வயது நிரம்பிய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாஜகான் நேற்று முன்தினம் இரவு சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஷாஜகான், சிறுமியை அழைத்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு ஷாஜகான் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைதிலி வழக்குப்பதிந்து ‘போக்சோ’ சட்டத்தில் ஷாஜகானை கைது செய்தார்.

மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெயிண்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்