சேத்பட்டில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தது

சேத்பட்டில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தது. சாலையில் இடையூறாக உள்ள 2 வீடுகளை இடிக்க வேண்டி இருப்பதால் கப்ளாம்பாடியில் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-01 23:30 GMT
மேல்மலையனூர்,


பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அகரக்கோட்டை கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. இதில் பீடம் தவிர்த்து சிலை மட்டும் 64 அடி உயரம் கொண்டது. இந்த பிரமாண்ட சிலை 240 டயர்கள் கொண்ட டிரைலர் இணைக்கப்பட்ட கார்கோ லாரி மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த மாதம் 8-ந்தேதி அகரக்கோட்டையில் இருந்து புறப்பட்ட இந்த சிலை பல்வேறு இடையூறுகளுக்கு இடையே விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை, தீவனூர், செஞ்சி வழியாக செல்லபிராட்டி கூட்டுசாலையை வந்தடைந்தது. பின்னர் அந்த சிலை கடந்த 30-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டை சென்றடைந்தது. இதையடுத்து சிலை மீண்டும் விழுப்புரம் மாவட்டம் சஞ்சீவிராயன்பேட்டை, கப்ளாம்பாடி, அவலூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை வழியாக பெங்களூரு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக சேத்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கோ லாரி நேற்று காலை 11.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. அந்த லாரி மதியம் 12.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட எல்லையான சஞ்சீவிராயன்பேட்டை, மேல்செவளாம்பாடி வழியாக மேல்மலையனூரை அடுத்த கப்ளாம்பாடியை வந்தடைந்தது.

அதன்பிறகு சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சிலை கொண்டு செல்ல இடையூறாக இருந்த 2 மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. மேலும் சாலையோரம் உள்ள 2 வீடுகளின் முன்பகுதி கட்டிடத்தை இடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றுள்ளனர். எனவே வீடுகளை இடிக்க முடியாததால் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியுடன் கப்ளாம்பாடி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிலை நிறுத்தப்பட்டிருந்ததை அறிந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் கப்ளாம்பாடிக்கு திரண்டு வந்து கோதண்டராமர் சிலையை வணங்கி செல்கின்றனர். சிலர் ஆர்வ கோளாறால் சிலை மீது ஏறி நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து சிலையை கொண்டு செல்லும் குழுவினர் கூறுகையில், கப்ளாம்பாடி சாலையோரம் உள்ள 2 வீடுகளின் முன்பகுதியை இடித்தால் மட்டுமே சிலையை கொண்டு செல்ல முடியும். இது பற்றி 2 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளின் முன்பகுதி இடிக்கப்பட்டு சிலை கொண்டு செல்லப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்