புத்தாண்டு கொண்டாட்டம், விபத்தில் சிக்கி 3 பேர் பலி - தாறுமாறாக வாகனம் ஓட்டிய 30 பேர் மீது வழக்கு
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 3 பேர் பலியானார்கள். தாறுமாறாக வாகனம் ஓட்டிய 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே கோவை அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காந்திபுரம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் வாலிபர்கள் இரு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி சென்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆகி புத்தாண்டு பிறந்ததும் வாலிபர்கள் உற்சாகம் அடைந்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் உரக்க சத்தம் போட்டவாறு சாலையில் வாகனங்களில் வேகமாக சென்றனர். சிலர் இரு சக்கர வாகனத்தின் ஸ்டேண்டை தரையில் உரசி தீப்பொறி பறக்க செய்தனர். சிலர் சைலன்சரை கழற்றி விட்டு அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டினர். இதனால் ரோட்டில் சென்றவர்கள் மிரட்சி அடைந்தனர். சில வாலிபர்கள் காரின் முன்பகுதியில் உட்கார்ந்தவாறும், காரின் பின் கதவின் மீது உட்கார்ந்து சத்தமிட்டவாறும் சென்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டும், ஹெல்மெட் அணியாமலும், வாகனங் களை தாறுமாறாக அதிக சத்தத்துடன் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை அண்ணாசிலை சந்திப்பில் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி நடனம் ஆடியவர் களை போலீசார் விரட்டிச் சென்று கலைத்தனர். சில இடங்களில் சாலையில் போக்குவரத்து இடையூறாக கேக் வெட்டிய வாலிபர்கை-யும் போலீசார் விரட்டினார்கள்.
3 பேர் பலி
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை காந்திபார்க் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (வயது 19). இவர் தனது நண்பரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தன்வீர் (21) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடினர். அவர்கள் 2 பேரும் நள்ளிரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்வதற்காக வேலாண்டிபாளையம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். நியாஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தன்வீருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை ரத்தினபுரி மருதாசலம் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் பிஜு(19). இவர் போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் புத்தாண்டு கொண்டாடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர், போத்தனூர் -வெள்ளலூர் ரோட்டில் சென்றபோது எதிரே அசோக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிஜுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிஜுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதவிர கோவையின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் 50 பேருக்கு கை, கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.