மணல் குவாரி அமைக்க கோரி, விருத்தாசலத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்

மணல் குவாரி அமைக்க கோரி விருத்தாசலத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-31 22:15 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மாட்டுவண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த குவாரிகளை அரசு திடீரென மூடியது. மேலும் விருத்தாசலம் மணவாளநல்லூரில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரியும் மூடப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், எனவே மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று காலை விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாட்டு வண்டி மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் அதன் சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் தொழிலாளர்கள், சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்