எச்.ஐ.வி. ரத்தம் வழங்கிய வாலிபர் திடீர் சாவு: பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் “இந்த உத்தரவு வேறு வழக்குக்கு பொருந்தாது” என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

எச்.ஐ.வி. ரத்தம் தானமாக வழங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உடலை பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவு வேறு வழக்குக்கு பொருந்தாது எனவும் மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-01-01 00:15 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் தானமாக வழங்கிய வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு சில நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினார்கள்.

இந்த நிலையில் வாலிபரின் தாயார், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எனது மூத்த மகன் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்து, அதற்காக மதுரையில் உள்ள தனியார் பரிசோதனை நிலையத்தில் தனது ரத்தத்தை பரிசோதித்து உள்ளார். இதில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று மற்றும் மஞ்சள்காமாலை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று இந்த வி‌ஷயத்தை சொல்லி, ஏற்கனவே தான் தானமாக வழங்கிய ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த என் மகன், கடந்த 26–ந்தேதி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

இந்தநிலையில் 30–ந்தேதி (நேற்று முன்தினம்) அதிகாலை 5 மணி அளவில் அவர் வலியால் அவதிப்பட்டார். உடனடியாக அங்கிருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் காலை 7 மணியளவில் அவர் திடீரென இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தபோது, திடீரென அவர் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது மகன் காலை 8.10 மணி அளவில் இறந்ததாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் அறிவித்தது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முறையாக பரிசோதிக்காமல் சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் முக்கிய சாட்சியாக எனது மகன் இருந்தார். அவரது உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தால் உண்மை நிலையை மறைக்கக்கூடும்.

எனவே வேறொரு மாவட்டத்தில் இருந்து சிறப்பு டாக்டர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

ஐகோர்ட்டு விடுமுறை நாளாக இருந்தபோதும், இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி வாதிடுகையில், ‘‘மர்மமான முறையில் இறந்தவர்கள், போலீசார் தாக்கியதில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தான் வீடியோவில் பதிவு செய்வது வழக்கம். ஆனால் மனுதாரரின் மகன் வி‌ஷம் குடித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். எனவே மனுதாரரின் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய தேவையில்லை. அதேபோல பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்படும் சான்றுகள் தடயஅறிவியல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு உரிய பரிசோதனை செய்து அவர்கள் தான் அறிக்கை அளிப்பார்கள்’’ என்றார்.

அப்போது நீதிபதி, மனுதாரர் தன்னுடைய மகனின் இறப்பு குறித்து சந்தேகம் அடைந்துள்ளார். அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்கும் வகையில் வேறொரு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்வது பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘மனுதாரரின் மகனுக்கு உரிய சிகிச்சைகள் அனைத்தும் நவீன முறையில் அளிக்கப்பட்டன. ஆனாலும் கடந்த 30–ந்தேதி காலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிற மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களை காட்டிலும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

எய்ட்ஸ் பாதித்து இறப்பவர்களின் உடலை 72 மணி நேரம் கழித்து தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி மனுதாரரின் மகன் உடலையும் பரிசோதனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் வேறொரு மாவட்டத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொள்ளலாம்’’ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தேனி, நெல்லை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 2 டாக்டர்களை வரவழைத்து அவர்களுடன் இணைந்து மதுரை டாக்டர்களும் மனுதாரரின் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு வேறு வழக்குக்கு பொருந்தாது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்