சோமவார்பேட்டை வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி; 5 பேர் கைது 3 துப்பாக்கிகள், கார் பறிமுதல்

சோமவார்பேட்டை வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 துப்பாக்கிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-12-31 22:49 GMT
குடகு,

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா பூவங்காலா கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத்துறை அதிகாரி லட்சுமிகாந்த் தலைமையிலான வனத்துறையினர் பூவங்காலா வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது வனப்பகுதியில் 5 பேர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றி வந்தது தெரியவந்தது. வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். ஆனாலும் 5 பேரையும் வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சாந்தள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கப்பா, லத்தேஷ், போப்பையா, உத்தய்யா, தேவராஜ் என்பதும், இவர்கள் புத்தாண்டையொட்டி வனப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், ஒரு கார், 5 செல்போன்கள், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரையும் வனத்துறையினர் சோமவார்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்